சென்னை: அரியலூர் நகராட்சியில் ஃபிட்டராக பணியாற்றிய ரங்கநாதன், மின் பணியாளராக பணியாற்றிய வெலிங்டன் ஆகியோரை கடந்த 2008ஆம் ஆண்டு, பணி நிரந்தரம் செய்து, நகராட்சி செயல் அலுவலர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இருப்பினும், அந்த உத்தரவை செயல்படுத்தாததால், ரங்கநாதனும், வெலிங்டனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2008 ஆம் ஆண்டு நகராட்சி செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்தி, ரங்கநாதன் மற்றும் வெலிங்டனுக்கு சேர வேண்டிய பணப் பலன்களை வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், வெலிங்டன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக அரியலூர் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து. ஆனால், மனுதாரர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படவில்லை.
இதனால், மனுதாரர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, இருவருக்கும் தலா ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 772 ரூபாய் சம்பள பாக்கி வழங்க வேண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், நகராட்சியிடம் போதிய நிதி இல்லாததால் இத்தொகையை வழங்க நகராட்சி சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, தொகையை இரு தவணைகளாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இரு தவணைகளுக்காக காசோலைகள் வழங்கிய நகராட்சி ஆணையர், கரோனா காரணமாக வங்கியில் போதிய பணமில்லாததால் காசோலைகளை வங்கியில் செலுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.
நீதிபதி கேள்வி
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, காசோலைகளை வங்கியில் செலுத்த வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விவரம், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, வங்கியில் பணமில்லை என தெரிந்தே காசோலைகள் வழங்கியது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என நீதிபதி தெரிவித்தார். 2008 முதல் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, நகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என, அரியலூர் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பதவி உயர்வு விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு