சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வசித்துவருபவர், பிரகாசி பெல்ரமைன்.
இவர், மதுரையில் அரசுப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ரூபன் ப்ராங்ளின், திண்டுக்கல் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரகாசி பெல்ரமைன் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப்புகாரில், தனது கணவரின் சகோதாரர் ஜான் ரிச்சர்ட், மனைவி ஜெயந்தி, அவர்களது மருமகன் அஸ்வின் ஆகியோர் சேர்ந்து மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அஸ்வின் என்பவர், வெளிநாட்டில் படிப்பிற்கு சீட் வாங்கி கொடுத்து வேலையும் வாங்கித்தரும் நிறுவனத்தை வெளிநாட்டில் நடத்திவருவதாகக்கூறி, தங்களது இரண்டாவது மகளுக்கு துபாய் அல்லது இங்கிலாந்தில் கல்வியோடு வேலையும் வாங்கித்தருவதாக உறுதியளித்து 2016ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு தவணைகளாக ஒரு கோடியே 61 லட்சம் ரூபாயை பெற்றதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
வாங்கிய பணத்திற்குப் பதிலாக வீடு; அதுவும் கடனில் இருக்கும் வீடு
மேலும், மகளுக்கு கல்வி கற்க இடத்தையும், வேலையையும் வாங்கித்தராததால், பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு கேட்டபோது, துரைப்பாக்கத்தில் அவர்களுக்குச் சொந்தமான வீட்டை, வாங்கிய பணத்திற்குப் பதிலாக எழுதிக்கொடுப்பதாக தெரிவித்ததாகவும்; ஆனால், அந்த வீட்டின் மீது வங்கியில் 75 லட்சம் ரூபாய் கடன் இருப்பதை மறைத்து தங்களை ஏமாற்ற முயன்றதாகவும் பிரகாசி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜான் ரிச்சர்ட், ஜெயந்தி அவர்களின் மருமகன் அஸ்வின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் மோசடி செய்த மூன்று பேர் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை வீட்டு உரிமையாளர்களுக்கு புது உத்தரவு வெளியிட்ட காவல் ஆணையர்