சென்னை: சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்துள்ளது. இதனால் சென்னை முழுவதும் ஊட்டி, கொடைக்கானல் போன்று காட்சியளிக்கிறது. வடகிழக்குப் பருவமழை பெய்யத்தொடங்கிய நிலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கடந்த 20 வருடங்களில் இதுவே குறைந்த பட்ச வெப்பநிலை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள மக்கள், பனிமூட்டம் தொடர்பான மீம்ஸ்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சென்னையில் அதிகாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவி வருகிறது.
காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்வோர், வேலைகளுக்கு செல்வோர், பனி மற்றும் குளிரால் சிரமத்திற்கு ஆளாகினர். கார்த்திகை மாத தொடக்கத்திலேயே பனிப்பொழிவால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பனிமூட்டம் தொடர்பாக நம்மிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலையாளர் கண்ணன், "குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடலோர தென்பகுதிகளில் சற்று அழுத்தத்தைக் கொடுக்கிறது. இதன் காரணமாக சூரிய வெளிச்சம் பூமியை வந்தடைவதில்லை.
அடுத்த இரண்டு நாட்களுக்கு, இதே பனி மூட்ட நிலையே தொடரும். போதுமான வெளிச்சம் வராததால் நிலப்பரப்பில் இருந்து குளிர் காற்று வருகிறது. இதனால் பகல் நேரத்திலும் வெப்பநிலை குறைகிறது. காற்றின் வேகம் மற்றும் மேகமூட்டம் குறைந்தால் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: Audio Leak: திருச்சி சூர்யாவிற்கு வாய் பூட்டு போட்ட பாஜக; நடந்தது என்ன?