தமிழ்நாட்டில் பொது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து இயங்க எட்டு மண்டலங்களாக பிரித்து அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
பேருந்துகளை இயக்கும்போது 60 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும்.
போக்குவரத்தில் மண்டலத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை.
பேருந்துகளை இயக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்: பேருந்துகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பயணிகளை பேருந்தில் ஏறுவதற்கு மற்றும் இறங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள வழிகளில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்துகளில் சானிடைசர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
பேருந்தில் போதுமான காற்றோட்ட வசதி இருக்கும் வகையில் ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும்.
பேருந்துகளில் பயணிகள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் காலியாக வைக்கப்படவேண்டும்.
பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு தினமும் வெப்பப் பரிசோதனை செய்ய வேண்டும்.
கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயன்படுத்துவதற்கான சானிடைசர் பாட்டில் தனியாக வைக்கப்பட்ட வேண்டும்.
பேருந்துக்குள் பயணிகள் முகக்கவசம் அணிந்தோ அல்லது ஏதாவது ஒரு வகையிலோ முகத்தினை மூடியிருக்க வேண்டும்.
பயணிகள் வாய் மற்றும் மூக்கினை முகக்கவசம் அல்லது துணி கொண்டு மூடியிருக்க வேண்டும்.
பேருந்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தால், அடுத்த பேருந்தில் செல்ல வேண்டும்.
பயணிக்கு காய்ச்சல் இரும்பல் உள்ளிட்ட கரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் இருந்தால், பேருந்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
உள்ளாட்சி அமைப்புகள் பேருந்து நிறுத்தங்களை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை அதில் குறிப்பிட்டுள்ளார்.