சென்னை: அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உடனே அனுப்ப வேண்டும்.
அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பள்ளிகள், சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, அலுவலகப் பணியாளர்களின் விவரங்களைத் தனித் தனியாகப் பூர்த்திசெய்து 26ஆம் தேதி காலை 10 மணிக்குள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்ப வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே அறிவுரை வழங்கி உள்ளது.
மேலும், பள்ளிகள் தற்போது திறக்கப்படாத நிலையில் ஆசிரியர்கள், போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற விவரத்தினைத் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து எழுத்து மூலமாகவோ, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மெயில் மூலமாகவோ பெற்று அதன் அடிப்படையில் தங்களது பள்ளி குறித்த விவரங்களை அனைத்து தலைமை ஆசிரியர்களும் அனுப்ப வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கூறியுள்ளதாவது, "நிவர் புயலால் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் உள்ளன. அதற்காகத் தமிழ்நாடு அரசு நவம்பர் 25 அன்று தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. நாளை (நவ. 26) 16 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இச்சூழலில் நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தைக் கணக்கில்கொண்டு சில மாவட்டங்களில் கல்வித் துறை அலுவலர்கள் நாளை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு கண்டிப்பாக வருகைதர வேண்டும் என்று மனிதாபிமானம் இன்றி உத்தரவிட்டிருப்பது முறையற்றதாகும்.
கரோனாவால் தமிழ்நாடு முழுவதும் கடந்த எட்டு மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வாய்ப்பு இல்லாத சூழலில், ஆபத்தான புயல் ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளாமல் சில மாவட்டக் கல்வித் துறை அலுவலர்கள் வெளியிட்டுள்ள உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற பள்ளிக் கல்வித் துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் முடிவைக் கண்டித்து படைத்துறை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு