பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. இதனால் தற்போது ஒரு சில பள்ளிகளில் உள்ள மாணவர்களின் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தொடக்கக் கல்வித் துறையில் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்களும், நடுநிலை, உயர்நிலை வகுப்புகளில் ஒரு ஆசிரியருக்கு 35 மாணவர்களும், மேல்நிலை வகுப்புகளில் ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் விவரங்களும், மாணவர்களின் விவரங்களும் கல்வித் தகவல் மேலாண்மை முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதாசாரம் கணக்கிடப்பட்டு பள்ளியில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட உள்ளனர். இவ்வாறு பணி நிரவல் செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் விவரங்களை வரும் வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் மாவட்டக் கல்வித் துறை அலுவலர்கள் சரிபார்க்க உள்ளனர்.
இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் ஆசிரியர்கள் அடுத்த வாரம் பணி நிரவல் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.