இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாசுக் கட்டுப்பாடு வாரியம் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு, மாநிலம் தழுவிய ஊரடங்கை அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981இன் படி 31.03.2020 வரை செல்லத்தக்கபடி வழங்கப்பட்ட இசைவாணைகள் மற்றும் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் 31.03.2020 வரை செல்லத்தக்கபடி வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ஆகியவற்றை மேலும் மூன்று மாதங்கள் அதாவது 30.06.2020 வரை செல்லத்தக்கபடி, நீட்டிப்பு செய்து வழங்கியது.
தற்போது, தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் தடுக்கப்படும் நிலையில் உள்ளது. எனினும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 - ஆகியவற்றின் படி வழங்கப்பட்ட இசைவாணைகள் மற்றும் கழிவுகள் மேலாண்மை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ஆகியவற்றை 30.06.2020 வரை செல்லத்தக்கபடி ஏற்கெனவே நீட்டிப்பு செய்து வழங்கியதை, முதலமைச்சர் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவின்படி, மேலும் மூன்று மாத காலங்கள் அதாவது செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லத்தக்கபடி நீட்டித்து வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.