சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 51 ஆயிரத்து 49 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 260 நபர்களுக்கும் பிகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 261 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 34 லட்சத்து 34 ஆயிரத்து 439 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 50 ஆயிரத்து 194 நபர்கள் கரோனா தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 3 ஆயிரத்து 505 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 705 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 9 ஆயிரத்து 78 என உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒருவர் இறந்துள்ளார். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 11 என அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இதையும் படிங்க : திருவாரூரில் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு