சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், ''பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த புரட்சியாளர், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்-இன் பிறந்தநாளில் என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சமூக நீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் ‘இட ஒதுக்கீடு எங்கள் உரிமை’ என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர்.
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி.சிங்கும், தலைவர் கலைஞரும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். வி.பி. சிங் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழி நடத்தட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
வி.பி.சிங் என்று அறியப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் உத்தரப் பிரதேசத்தில் ‘தையா’ என்ற ராஜவம்சத்தில் 1931ஆம் ஆண்டு ஜுன் 25ஆம் தேதி பிறந்தார். ராஜவம்சத்தில் பிறந்தாலும் அவரின் சிந்தனைகள் யாவும் ஏழை மக்களின் வாழ்க்கை குறித்தே இருந்தது. அதற்கு உதாரணமாக, ஆச்சார்யா வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்ற அவர், தனது நிலங்களை தானமாக அளித்தார்.
ஒரு பிரிவினரைத் தவிர பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக இருப்பதை மாற்ற வேண்டும் என்று எண்ணியவர், அதற்கு அரசியல் அதிகாரம் தான் சரியான வழி என்று தேர்ந்தெடுத்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரானார். பின்னர் கட்சியில் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்த சிங், 1980ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் இவர் நிதி அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பெரும் பணக்காரர்களை சோதனை மூலம் அதிர வைத்தார். அதன் காரணமாக அவரது துறை மாற்றப்பட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.
அவர் பாதுகாப்புத்துறை அமைச்சரானதும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படைகளைத் திரும்பப் பெற்றார். பின்னர் போஃர்ப்ஸ் ஊழல் சம்பந்தமாக ராஜிவ் காந்தியை விமர்சித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1989ஆம் ஆண்டு தனிக்கட்சியைத் துவங்கினார். பின்னர் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனார்.
அவர் பிரதமராக இருந்த 11 மாத காலத்தில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்தினார். வலதுசாரி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மண்டல் கமிஷன் அறிவுறுத்திய படி 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இதனால் அவருக்கு ஆதரவு வழங்கிய பாஜக தனது ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் வி.பி.சிங் ஆட்சி அதிகாரத்தை இழந்தார்.
குறுகிய காலம் பதவி வகித்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி பணியாற்றிய வி.பி.சிங் புகழைப் போற்றும் வகையில் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதிக்காவலன் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.