ரஷ்யாவின் வோல்கோகிராட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்துவந்த கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், திருப்பூர் தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லீபக் ஆகிய நால்வரும் கடந்த 8ஆம் தேதி வால்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
மாணவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர், இங்குள்ள கட்சிகளிடம் உறவினர்கள் வலியுறுத்தினர். இதன் விளைவாக, 4 மாணவர்களின் உடல்கள் ரஷ்யாவிலிருந்து துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து இன்று (ஆகஸ்ட் 21) மாலை 4 மணியளவில் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
விமான நிலைய சோதனை நடைமுறைகள் முடிந்த பின்பு மாணவர்களின் உடல்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே, தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் உயிரிழந்த மாணவர்களின் உடல்களுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விநாயகர் சதுர்த்தியில் இந்து முன்னணியின் நிலைப்பாடுதான் பாஜகவின் நிலைப்பாடு. வீடுகள், கோயில்களில் அரசு, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள விதிமுறைகளுக்குட்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என இந்து முன்னணி கூறியுள்ளது. இதையேதான் பாஜகவும் தனது தொண்டர்களிடையே அறிவுறுத்தியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜக நிலைப்பாடு: எல். முருகன்!