சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஆனது. மேலும் மாணவர்கள் நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வருகைதராமல் இருந்தால், மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.
அந்தவகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பொதுத் தேர்வினைப் போல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் பல தகவல்கள்
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, போளூரில் உள்ள தனியார் பள்ளிகளில் தேர்வுத் துறை இணை இயக்குநர் பொன் குமார் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் அளித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தேர்வினை நடத்துவதில் ஏற்பட்ட கவனக்குறைவு குறித்த விவரங்களையும், முறைகேடுகளையும் அரசிடம் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளார்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வந்தவாசி, போளூரில் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை மாணவர்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து அளித்துள்ள தகவல் தெரியவந்துள்ளது. ஆசிரியர்களுக்கும் அதனை அனுப்பி உள்ளனர்.
திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வினாத்தாள் கட்டுப்பாட்டு அறை அமைத்து வைக்காமல், பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்புதல் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும்
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 14) பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் பள்ளிகளில் படிக்கும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9ஆம் தேதிமுதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
இதில் சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இது குறித்து துறை ரீதியான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலிருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்குக் காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இத்தேர்வுகள் நடத்துவது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எந்தவித மாற்றமுன்றி தொடர்ந்து நடைபெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார.
இதையும் படிங்க: நீலம் பதிப்பகத்திற்கு ஏன் கடைகள் மறுப்பு? - புத்தக விற்பனையாளர் சங்கம் விளக்கம்