மக்களவை தேர்தல் முடிவுகளைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளுக்காக தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப் பேரவையில் அதிமுக தரப்பிடம் 113 உறுப்பினர்கள் உள்ளனர். திமுக தரப்பில் 97 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது தவிர ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ, சபாநாயகர் ஒருவர் உள்ளார்கள். 22 இடங்கள் காலியாக உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் நிச்சயமாக தேவை.
அதன்படி நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 21 இடங்களில் வெற்றிபெற்றால் அதிமுக ஆட்சி காலி. ஆனால் அதிமுக 5 இடங்களில் வென்றாலே போதும், இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதிமுகவின் 113 சட்டப்பேரவை உறுப்பினர்களில், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், ஏ.பிரபு ஆகியோர் அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளனர். மேலும் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் அதிமுக எதிர்ப்பாளராக மாறும் பட்சத்தில், அதிமுக 11 இடங்களில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும்.
திமுக 21 இடங்களில் வெற்றிபெற்றால், பெரும்பான்மையை நிருபித்து ஆளுநரிடம் ஆட்சியமைக்கக் கோரும். 21 இடங்களில் வெற்றிபெறுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. திமுக 15 இடங்களில் வெற்றிபெற்றாலும் அதிமுக ஆட்சிக்கு சிக்கல்தான். ஆனால் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்களும், கூட்டணி வைத்து வெற்றிபெற்றவர்களும் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஸ்டாலின் முதல்வர் ஆவதை தமிமுன் அன்சாரி தவிர மற்றவர்கள் விரும்பமாட்டார்கள். எனவே இதுபோன்ற சூழலில் மறுதேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது.