சென்னை: தமிழகத்தில் சிறார்கள் கடத்தப்பட்டு ரயில்கள் மூலமாக வெளி மாநிலங்களுக்கு அழைத்து சென்று அவர்களை பிச்சை எடுக்க வைப்பது போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்துகின்றனர். மேலும் வீட்டை விட்டு கோபித்து கொண்டு வெளியேறும் சிறார்கள் மற்றும் காணாமல் போகும் சிறார்கள் என பல்வேறு காரணங்களுக்காக ரயில்கள் மூலமாக பிற மாநிலத்திற்கு செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனை தடுப்பதற்காக தமிழக ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்தாண்டு பல்வேறு காரணத்தினால் தொலைந்து போன சிறார்கள் மீட்கப்பட்டது தொடர்பான புள்ளி விவரங்களை ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் பல்வேறு காரணங்களுக்காக காணாமல் போன 1267 சிறார்களை ரயில்வே காவல்துறை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிவித்துள்ளது.
இதில் 1117 சிறுவர்களும், 150 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை புள்ளி விவரங்களில் தெரிவித்துள்ளது. அதாவது இதில் சுமார் 90% சிறுவர்களை தமிழக ரயில்வே போலீசார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு 1693 சிறார்களும், 2020ஆம் ஆண்டு 546 சிறார்களும், 2019ஆம் ஆண்டு 1558 சிறார்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் ரயில்வே தலைமையகத்தில் உள்ள சிறப்பு சிறார் காவல் பிரிவு ரயில்வே வளாகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் தமிழக இருப்பு பாதை காவல் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிறார் நீதி சட்டத்தை அமல்படுத்தவும் அனைத்து அரசு ரயில்வே காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு 1512 என்ற உதவி எண் மூலமாகவும், 9962 500 500 வாட்ஸ் எண் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அரசு இருப்புப்பாதை காவல்துறை தெரிவித்துள்ளது.