சட்டப்பேரவை பேரவை இரண்டாம் நாள் கூட்டம் இன்று (செப்.15) கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் நடைபெற்றது.
நீட் தேர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அப்போது பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுறை ப. சிதம்பரத்தின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்விற்கு ஆதரவாக வாதாடினார் என்று தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை முன்பாக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், சட்டப்பேரவையிலிருந்து, காங்கிரஸ் உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியே வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை மூத்த உறுப்பினர் ராமசாமி, ‘நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசிடம் அழுத்தமாக எதிர்ப்பை தெரிவிக்க தமிழ்நாடு அரசிற்கு திராணியில்லை. தற்போதுள்ள அமைச்சர்கள் பல்வேறு ஊழல் வழக்கில் தொடர்புள்ளவர்கள்.
அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தினால் நீட் தேர்விற்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் காட்ட தயங்குகிறார்கள்.
நீட் தேர்விற்கு எதிராக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால் அவரின் பெயரை கூறிக்கொண்டு ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு அரசு மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் அல்லது கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.
நீட் தேர்விற்கு எதிராக இந்த அரசு பேசத் தயாராக இல்லை’ எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க:ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சிபிஎஸ்இ பள்ளிகள் மீது குவியும் புகார்கள்!