சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், "தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில், கழக துணை பொதுச் செயலாளர் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னெடுக்கும் கலைஞர் 100 வினாடி - வினா போட்டி நடைபெற இருக்கிறது.
திராவிட இயக்கத்தை, தமிழ்நாடு எனும் பெரும் இனத்தின், தமிழின வரலாறு, முந்தைய கள போராட்டங்கள், அரசியல் புரட்சிகள் அதற்கு வித்திட்ட நம் முன்னோட்டிகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து கூறவும் இந்த வினாடி வினா போட்டி பெரும் வாய்ப்பாக அமையும். 10 ஆயிரம் கேள்விகளோடு 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடத்தப்படும்.
இந்த வினாடி வினா போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம்.kalaingar100.co.in என்ற இணையதளத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இணையவழி போட்டிகள் நடைபெற இருக்கின்றன. செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள Kalaignar 100 quiz வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : Seeman : "சட்டப்படினாலும் சரி.. அரசியல் ரீதியினாலும் சரி சந்திக்கலாம்.. நான் ரெடி" - சீமான்!