தமிழ்நாட்டில் கரோனா தொற்று 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மாநில அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் மசூதி, தேவாலயம், கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக மத தலைவர்களுடன் தமிழ்நாடு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அனுமதிக்கக் கூடாது, கட்டாயம் முக கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு மணி நேரம் வழிபாடு செய்ய அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இக்கூட்டத்தில், அனைத்து மதத்தையும் சார்ந்த மதத் தலைவர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.