சென்னை: தலைமைச் செயலகத்தில், நேற்று (27.05.2023) பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு முன்னிலையில் பால் உற்பத்தியாளர்கள் சேவையை மேலும் அதிகரிக்கவும் அரசின் நலத்திட்டங்களை பால் உற்பத்தியாளர்களுக்கு கொண்டு சேர்க்கவும் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சரின் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ந.சுப்பையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர், கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள காலி நிலங்கள், சங்க அளவில் உள்ள காலி நிலங்கள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகள் அனைத்திற்கும் காப்பீடு வழங்க வேண்டும் என்றும் அக்கறவை மாடுகளுக்கு தேவையான சரி விகிதக் கலப்பு தீவனத்தை தடையின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.புதிய பால் உப பொருட்கள் ஆவினில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பால் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும் நிலையான தரத்திலும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து சாதனை!
சங்க அளவில் செயல்படும் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களில் கறவை மாடுகளிடமிருந்து பெறப்பட்ட பால் உடனே வந்தடைய வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார். தற்போது ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் உட்கட்டமைப்பு வசதிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி ஆவினின் பால் கையாளும் திறனை தினசரி 70 லட்சமாக உயர்த்திட உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், "பால் உற்பத்தி செலவை குறைக்க அகத்தி, சூபாபுல் ஆகிய தீவன மரங்கள் ஒவ்வொரு பால் உற்பத்தியாளர்களின் நிலங்களில் வளர்க்க வேண்டும் எனவும், ஆவின் நிறுவனம் தனித்துவமான பால் உப பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் ஆவின் ஊழியர்களுக்கு தேசிய பால்வள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வல்லுநர்களைக் கொண்டு புத்தாக்க பயிற்சிகள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இறுதியில் பால்வளத்துறை அமைச்சர் பால் பண்ணைகளில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தி செயல் திறனை அதிகரிக்கவும், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: மீட்சி பெறும் நெல்லை 'மரக்கடசல்' - உற்பத்தியாளர்களின் வேண்டுகோள் என்ன?