சென்னை: தமிழ் சினிமா
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே.. சேரன் பகிர்ந்த ஆட்டோகிராப்
தமிழ் சினிமாவில் இயக்குநர் சேரன் ஒரு பொக்கிஷம். இவர் இயக்கிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொற்காலம் போன்ற படங்கள் எக்காலத்துக்கும் பொருந்தி நிற்கும். இவரது படங்களை பார்த்தால் சிறு வயதில் நாம் தொலைத்த மொத்த வாழ்க்கையும் கண்முன் வந்து நிற்கும். இந்நிலையில், இவர் தான் படித்த பள்ளி பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் எனது ஊர், நான் படித்த துவக்கப்பள்ளி, அத்தனை ஆசிரியர்களின் முகம் வந்து போகிறது. காமராஜர் கொண்டு வந்த சத்துணவு வாங்க தட்டேந்தி நின்றது, சுதந்திர கொடியேற்றி சுண்டல், மிட்டாய் வழங்கி லீவு விட்டது, மண் தரையில் உட்கார்ந்து படிக்கும்போது கட்டெறும்பு கடித்தது எல்லாம் ஞாபகம் வருகிறது என்று சிலாகித்து தனது பழைய கால ஞாபக முத்துக்களை உதிர்த்துள்ளார்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் 'விழி திற தேடு'
தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 'விழி திற தேடு' என்ற படம் உருவாகிறது. இப்படத்தை வி.என்.ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார். தொழில்நுட்பங்களைக் காவல்துறையில் பயன்படுத்தப்படும் விதத்தை விட குற்றவாளிகள் மிகவும் லாவகமாகப் பயன்படுத்திக் குற்றங்களைச் செய்கிறார்கள். குற்றவாளிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எப்படி அரசியல் பின்புலத்தில் ஒளிந்து கொள்கிறார்கள் அப்போது காவல்துறை என்ன செய்கிறது போன்ற பலவற்றை இப்படம் பேசுகிறது என்கிறார் இயக்குநர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 09) வெளியிடப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் படத்தின் காப்பியா காவாலா - அனிருத்தை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் தமன்னா, மோகன் லால், சிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. காவாலா என்ற இந்த பாட்டுதான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்க். இதில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்துள்ளது. இந்த நிலையில் இந்த பாட்டின் தொடக்கத்தில் வரும் மியூசிக் எம்ஜிஆர் படத்தில் சரோஜா தேவிக்கு போடப்பட்ட டியூன் என்று கூறப்படுகிறது. 1958ம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் படத்தில் வரும் அந்த வீடியோவை போட்டு என்னப்பா அனிருத் இதுவும் காப்பியா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இன்னொரு தரப்போ அனிருத் தனது முந்தைய படங்களில் போட்ட பாடல்களையே திரும்ப திரும்ப பயன்படுத்தி வருகிறார் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் 93 வது பிறந்தநாள்
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் 93வது பிறந்தநாள் இன்று. தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்ற திரை விஞ்ஞானி என்று இவரை சொல்லலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர். கமல்ஹாசனின் திரை வாழ்வில் ஆகச் சிறந்த படங்களை கொடுத்தவர் என இவரது சாதனை பட்டியல் நீளும். சினிமாவில் துணிச்சல் மிக்க பெண் கதாபாத்திரங்களை படைத்து புதுமைகளை புகுத்தியவர் இவர். இன்று (ஜூலை 09) இவரது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் உள்ள கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பாலச்சந்தரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, நடிகர் பூவிலங்கு மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு நடிகர் சரத்குமார் இரங்கல்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கு நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட தகவல் மிகவும் வேதனையளிக்கிறது. 2009-ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்த விஜயகுமார், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், அண்ணா நகர் துணை ஆணையராகவும் பணியாற்றி, கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக இந்த ஆண்டு பொறுப்பேற்று நேர்மையாக, திறம்பட செயல்படும் அதிகாரி என்ற பெயர் பெற்றவர்.
எந்தவொரு சூழலிலும், எத்தகைய மன அழுத்தங்கள் ஏற்பட்டாலும் தற்கொலை தீர்வல்ல என்பதை தொடர்ந்து பல ஆண்டுகளாக உணர்த்தி வருகிறேன். இதில் காவல்துறையில் முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்டு பாராட்டப்பட்ட மேலதிகாரி தற்கொலை செய்திருப்பது உண்மையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது போன்று எந்தவொரு நிலையிலும், காவல்துறை சகோதரர்களுக்கும், சமூகத்திலும் மன அழுத்தங்கள் அதிகரிக்காமல் தடுப்பதற்கு நாம் உறுதியேற்போம், அன்பை பகிர்வோம் என தெரிவித்து, அன்னாரின் குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதிகாரியை இழந்து வாடும் காவல்துறை சகோதரர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Jawan Trailer Release Date : ஜவான் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு... இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!