டஃபே டிராக்டர் நிறுவனம் உலகிலேயே மூன்றாவது பெரிய டிராக்டர் நிறுவனமாகத் திகழ்கிறது. கரோனா தொற்று ஊரடங்கு காலத்தின் மத்தியில் இந்நிறுவனம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.
அந்த வகையில் இரண்டு ஏக்கர், அதற்கும் கீழ் நிலம் உள்ள குறு விவசாயிகளுக்கு, தங்களது வாடகை டிராக்டர் சேவையை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இலவச டிராக்டர் சேவை மூலம் 50 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக டஃபே நிறுவனம் 16,500 மாசே ஃபேர்குஷன் டிராக்டர்களை (Massey Ferguson Tractors) வழங்குவதாகவும்; 28,800 கருவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் விவசாயிகள் டிராக்டர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தமிழ்நாடு அரசின் உழவன் செயலி மூலமாகவும், டஃபே நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் இந்த சேவையைப் பெறலாம்.
கரோனா தொற்று காலத்தில் டஃபே நிறுவனம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்துவதற்கும் இந்நிறுவனம் உதவி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
கரோனா தொற்றை எதிர்கொள்ள இந்நிறுவனம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு 15 கோடி ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தளர்வுகளற்ற ஊரடங்கு: இயல்பு நிலையில் இயங்குகிறதா சென்னை?