சென்னை ஆயிரம் விளக்கு வேலஸ் கார்டன், 3ஆவது தெருவில் வசித்து வருபவர் மருத்துவர் பிரதீப் குமார். இவர் வழக்கம்போல தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். மேலும், வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் இரண்டு இரு சக்கர வாகனங்களும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முஸ்தபாவும் தனது ஆட்டோவை நிறுத்திவைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (நவ.02) நள்ளிரவு 1.30 மணியளவில் பிரதீப் குமாரின் கார் திடீரெனெ எரியத்தொடங்கியது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் முஸ்தபா கூச்சலிட்டார். பின் அக்கம்பக்கத்தினர் காவல் துறை மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்ததோடு, தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார், ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமானது.
பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேலும் கார் பேட்டரி ஷார்ட் சர்க்யூட் ஆனதால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தீ விபத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக, யாரேனும் வாகனங்களுக்கு தீ வைத்தார்களா? அல்லது வாகனங்கள் எரிந்ததற்கு வேறு ஏதேனும் காரணமா என ஆயிரம் விளக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டீசல் நிரப்ப சென்ற இடத்தில் பற்றி எரிந்த கார்!