தமிழ்நாட்டில் கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு உத்தரவைக் கடந்த 10ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. கரோனா மருத்துவ சிகிச்சைக்காக உலகத் தமிழர்கள் நிதியுதவி அளித்து உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த பள்ளி சிறுவன் முதல் நடிகர், நடிகைகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பண உதவியை அளித்து வருகின்றனர். இந்த வரிசையில் தனது தந்தையின் நினைவாக ஆதரவற்றோருக்கு உணவளிக்க சிறுகச் சிறுக சேமித்தப் பணத்தை கரோனா நிவாரண நிதிக்காகத் தஞ்சாவூர் ஆட்சியரிடம் பள்ளி மாணவி வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன், பாக்கியலட்சுமியின் ஒரே மகள் சாம்பவி (12). கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு திருநீலகண்டன் மின்சார விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து பாக்கியலட்சுமி, தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியை கைவிட்டு, தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, கஜா புயலின்போது இவர்கள் வளர்த்த தென்னை மரங்கள் முழுக்க சூறையாடப்பட்டன. இதற்காக தமிழ்நாடு அரசு 1.5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கியது. இந்த நிதியை தன் சொந்த இழப்பிற்கு செலவிடாத பாக்கியலட்சுமி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் விளையாடக் கைப்பந்து மைதானத்தை அமைத்துக் கொடுத்தார்.
அவர் வளர்ப்பில் உலகைக் கண்ட அவரது மகள் சாம்பவி, தனது தந்தையின் நினைவாக ஆதரவற்றோருக்கு உணவளிக்க சேர்த்து வைத்த எட்டாயிரத்து 300 ரூபாய் பணத்தை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் வழங்கினார். மாணவியின் இந்தச் செயலை ஆட்சியர் பெரிதும் பாராட்டியுள்ளார்.