சென்னை: பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று(மார்ச் 8) நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழுவை மேம்படுத்தும் வகையில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும் மேலாண்மை குழுக்களின் அவசியம் குறித்து பெற்றோர் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு
பள்ளி மேலாண்மை குழுவில் பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் மட்டுமே தலைவராக நியமிக்கப்பட வேண்டும். மேலும் துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளும் நியமனம் செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இதில் சேர்க்கப்படுவார்கள். 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும்.
பள்ளி மேலாண்மை குழு நியமனத்தில் அரசியல் தலையீடு எங்கும் இருக்காது. பள்ளிகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக நியமனங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
6 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு மட்டும் மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும். அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை அதிகப்படுத்துவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வில் தொழில்கல்வி பாடப்பிரிவு இந்தாண்டு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனைப் பெரிதுபடுத்தி வருகிறீர்கள். ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்கும் வகையில் திமுக ஒருபோதும் ஒத்துப்போகாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?- அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்