இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.பால் உற்பத்தி அதிகரித்துள்ள இந்த நேரத்தில் பால் கொள்முதல் செய்துவந்த பெரிய , சிறிய பால் நிறுவனங்கள் பால் வாங்குவதையும் , நுகர்வோர்களுக்கு பால் விற்பதையும் நிறுத்திக்கொண்டது.
இதனால் அன்றைய தினம் உற்பத்தி செய்த பாலை தனியாருக்கு விற்கமுடியாமல் அன்றாட வாழ்வாதார இழப்பை பால் உற்பத்தியாளர்கள் சந்தித்தார்கள். எனவே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் தனியாருக்கு விற்பனை செய்துவந்த பால் உற்பத்தியாளர்களது முழு பாலையும் இந்த அரசும் , ஆவின் நிறுவனமும் வாங்கிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தோம் .
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆவின் நிறுவனமும் முழு பாலையும் வாங்கிக்கொண்டது. 100 நாள்களில் நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்துள்ளது . கொள்முதல் செய்யப்படும் சுமார் 10 லட்சம் லிட்டர் அளவு பாலை பவுடராகவும் , பாலாகவும் , பால் பொருட்களாகவும் விற்பதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது . இதனடிப்படையிலேயே முதலமைச்சர் ஐந்து வகையான பால் பொருள்களின் விற்பனையை தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிர்வாக நடவடிக்கைகளை தேவையில்லாமல் பண்பற்ற முறையில் வேண்டுமென்றே குறைசொல்கின்ற நோக்கத்தில் தனது கருத்துகளை பத்திரிக்கைகள் , குறுஞ்செய்திகள் வாயிலாகவும் விமர்சனம் செய்து வருகிறார்.
தனியார் நிறுவனங்கள் மற்றும் பால் வியாபாரிகள் ஊரடங்கு அறிவித்தவுடன் முன்னறிவிப்பின்றி பால் கொள்முதல் செய்வதை நிறுத்தியதற்கும், லிட்டர் 32 ரூபாய்க்கு வாங்கிய பாலின் கொள்முதல் விலையை ரூபாய் 25 என விலை குறைத்தற்கும் கருத்து தெரிவிக்காத அவர், அரசு நிறுவனமான ஆவினை தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்.
அவர், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான அறிக்கைகள் விடுவதை கைவிடுமாறும், தனியார் பால் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு ஆவின் நிறுவனத்தை குறை கூறுவதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் .
இதுபோன்று அரசுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் இவர்மீது தக்க நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் “ எனத் தெரிவித்துள்ளது.