இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்," பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரூ.2,500 வழங்கப்படும் என, கடந்த 19ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பான அரசாணையில் ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், டிசம்பர் 21ஆம் தேதியே தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். தேர்தலை எண்ணி அவர் செய்த காரியம் அது. இப்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அதிமுகவினரை வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
தேர்தலை மனதில் வைத்து, அதிமுக நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசு போல் காட்டிக் கொள்ள முதலமைச்சர் முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. பொங்கல் பரிசு மக்களின் வரிப்பணம். அது மக்களுக்கே திரும்பிப் போவதைத் திராவிட முன்னேற்றக் கழகம் மனமார வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தலுக்காக, அரசின் பொங்கல் பரிசை அதிமுகவினரை வைத்து வழங்குவது எப்படி சரியாகும்.
இதுமட்டுமல்லாது, அனைத்து அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இந்தப் பொங்கல் பரிசு முறையாகப் போய்ச் சேருவதில் குளறுபடிகளை ஏற்படுத்தும். அதில் அதிமுகவினர் மட்டும் பயன்பெற முதலமைச்சர் நினைக்கிறாரா என முதலமைச்சர் விளக்க வேண்டும்.
ஆகவே அதிமுகவினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் பழனிசாமி உடனே நிறுத்த வேண்டும். அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி மற்றும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி ஆகியவை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும். இல்லையெனில் திமுக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு ரூ.2,500! - அரசாணை வெளியீடு!