சென்னை: அருணாச்சலேஸ்வரர் கோயிலின் பக்தரான திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளத்தைச் சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகா கார்த்திகை தீபத்தை அடுத்து 7ஆம் நாள் தேர் திருவிழா நடக்கும் எனவும், 40 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் இந்த தேர் பெரிய வீதியின் வழியாக வந்து திரும்பும்போது சாலை இறக்கமாக இருப்பதால் அதை இழுப்பவர்கள் தேரின் பின் சக்கரங்களை பிடித்து இழுத்து நிலைநிறுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: Madras High Court: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து தீர்மானம்; பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆஜராக உத்தரவு..!
மேலும் பெரிய வீதி, தார் சாலையாக இருப்பதால் தேரை நிலைநிறுத்துவது சரியாக இருப்பதாகவும், தற்போது அந்த சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றும் பணிகளை தொடங்கி உள்ளதாகவும், இவ்வாறு கான்கிரீட் சாலையாக அமைக்கப்படுவதால் தேரின் பின் சக்கரங்களை பிடித்து இழுத்து நிலைநிறுத்துபவர்களுக்கு பிடிமானம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது குறித்து கடந்த மே 5ஆம் தேதி தமிழக அரசிடம் கோரிக்கை மனு அனுப்பியும், அதை கண்டுகொள்ளாமல் கான்கிரீட் சாலை அமைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் தேர் வலம் வரக்கூடிய பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vao muruder case: லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு ஆக.21ல் தொடக்கம்-தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்!