தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் பாஜக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிராவில் நடந்த இந்த அதிரடி திருப்பம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பாஜகவின் செயலை விமர்சித்து வந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கருத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில் அவர், “மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா? அல்லது அசிங்கம் என்பதா?. அதனை எதனோடு ஒப்பிடுவது என்றே தெரியவில்லை. 'ஜனநாயகப் படுகொலை' என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ, நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும், இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் பாஜக உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது?. பாஜக சித்து விளையாட்டு என்பதா?. இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைக்குனிவு!” என்று கடும் கண்டனத்துடன் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு ஆதரவுக்கரம்: அஜித் பவாரின் பதவி பறிப்பு!