சென்னை வில்லிவாக்கத்தில் இயங்கிவரும் சிங்காரம் பிள்ளை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்று (அக்.19) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் சென்னை டிபிஐ வளாகத்தில் இணை இயக்குநர் சுகன்யாவை சந்தித்து மனு அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது, "சென்னை வில்லிவாக்கத்தில் இயங்கிவரும் சிங்காரம் பிள்ளை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி 70 ஆண்டுகள் பழமையானது. அறக்கட்டளை கீழ் இயங்கிவரும் இந்தப் பள்ளியின் மொத்த பரப்பளவு பன்னிரண்டரை கிரவுண்ட் என்ற நிலையில், 8 கிரவுண்ட் இடங்களை அறக்கட்டளை நிர்வாகம் விற்பனை செய்து இருக்கிறது.
சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் எட்டு கிரவுண்ட் இடத்தை அறக்கட்டளை நிர்வாகமே விற்பனை செய்திருப்பது தவறு. அரசு உதவிபெறும் தனியார் பள்ளி இடங்களை வணிக ரீதியாக பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ சட்டத்தில் இடம் கிடையாது.
கரோனா காலத்திலும் தனியார் நிறுவனங்கள் சென்னை மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டடங்களை கட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சொத்துகள் விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசுதான் பொறுப்பு'