கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் கடந்த மார்ச் 23ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புறநகர் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இருப்பினும் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படவில்லை. அப்போதைய சூழலில் தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து இருந்ததால் ரயில் சேவை தொடரப்படவில்லை.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்து வருகிறார். அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பது பற்றி முதலமைச்சர் நேற்று முந்தைய நாள் (அக். 28) ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், புறநகர் ரயில்கள் திறப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் முதல் சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க தென்னக ரயில்வே தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்குவது குறித்து டெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்த பின் படிப்படியாக சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அலுவலர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே புறநகர் ரயில்களை இயக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ரயில்வே துறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.