சென்னை: ஜவுளி சங்கத்தினரின் கோரிக்கைக்கு உறுதுணையாக இருந்து ஒன்றிய அரசுக்கு பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்ததையடுத்து தற்போது பருத்தி மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தநிலையில், இன்று (ஏப்ரல் 18) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அகில இந்திய ஜவுளி சம்மேளன கூட்டமைப்பினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய ஜவுளி சம்மேளன கூட்டமைப்புத் தலைவர் ராஜ்குமார், "ஒன்றிய அரசு பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதுணையாக இருந்தார். ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் வரியை குறைக்க வலியுறுத்தியிருந்தார். அதற்கு நாங்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
30 முதல் 35 லட்சம் ரூபாய் பருத்தி பேல் பதுக்கல்: முன்பு 46 ஆயிரம் ரூபாய் என இருந்த பருத்திவிலை 96 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் ஜவுளித்தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பருத்தி பஞ்சு பதுக்கல் அதிகரித்தது. 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரையில் பருத்தி பேல் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பதுக்கப்பட்டுள்ளது. இதனால் பருத்தி பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்தது.
தற்போது இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளாதால், படிப்படியாக பருத்தி விலை குறையும். உற்பத்தியாளர்கள் விரைவில் பயனடைவார்கள். பருத்தி விலை குறையும் பட்சத்தில், நூல் விலையும் குறையும். இதனால் நூலின் மூலம் உற்பத்தியாகும் பொருட்கள் விலையும் குறையும். பதுக்கல் செய்யப்பட்ட பருத்தி மூட்டைகளும் வெளிவரும். ஜூன் மாதத்தில் ஆடைகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பருத்தி பஞ்சு பதுக்கல்..பியூஷ் கோயலைச் சந்திக்கும் ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனம்