செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு படித்த முன்னாள் மாணவிகள் சிலர், சிவசங்கர் பாபா தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் அளித்தன் பேரில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், மாணவிகளை மூளை சலவை செய்ததாக சுஷ்மிதா என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின், ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன் என்பவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்து, தற்போதுவரை பணியாற்றிவருகிறேன். பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யபட்டுள்ளார். இதில், எனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி அலுவலர்கள் என் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.
எனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, எனவே இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கின்ற எந்த நிபந்தனைகளையும் ஏற்க தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபா சொகுசு அறைக்கு சீல்!