சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு அமர்வுகளும், மதுரைக் கிளையில் 2 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் மூலமாக 439 அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 302 கோடியே 44 லட்சத்து 11 ஆயிரத்து 63 ரூபாய் மதிப்பிலான 61 ஆயிரத்து 347 நிலுவை வழக்குகளிலும், 138 கோடியே 9 லட்சத்து 67 ஆயிரத்து 451 ரூபாய் மதிப்பிலான நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபபடாத 16 ஆயிரத்து 913 வழக்குகள் என மொத்தம் 440 கோடியே 53 லட்சத்து 78 ஆயிரத்து 514 ரூபாய் மதிப்பிலான 78 ஆயிரத்து 260 வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டன.
முக்கியமாக 9 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 721 ரூபாய் மதிப்பிலான 412 செக் மோசடி வழக்குகளும், ஆயிரத்து 965 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92 கோடியே 51 லட்சத்து 54 ஆயிரத்து 241 ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 52 கோடியே 79 லட்சத்து 43 ஆயிரத்து 757 ரூபாய் மதிப்பிலான 999 உரிமையியல் வழக்குகளில் சமரசம் எட்டப்பட்டு, உரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. 2 கோடியே 92 லட்சத்து 45 ஆயிரத்து 679 ரூபாய் மதிப்பிலான தொழிலாளர் பிரச்னை தொடர்பான 49 வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டு, தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலாளர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொத்துக்காக நடந்த கொலை... துப்பு துலக்கிய பெண் காவல் அதிகாரிக்கு மத்திய அரசு விருது...