சென்னை: தமிழ்நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் விடுமுறைக்கு பின்பு இன்று (ஆக.31) மீண்டும் சட்டப்பேரவைக் கூடியது.
இன்றைய கூட்டத் தொடரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில், தமிழ்வளர்ச்சி துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது கோவை தெற்குத் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில், தொழில் படிப்பு படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.
பெண்களுக்கென் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டாள் பெயரில் இளம் பெண் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
சி.வி. கணேசன்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர்: எந்த தொழில் சார்ந்த படிப்பு படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லமுடியும் என்ற வகையில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம். இதற்கான திறன் மேம்பாடு உருவாக்குவதற்காக, ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வானதி ஸ்ரீனிவாசன்: அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்களுக்கு ஏற்றவாறு தொழில் திறன் பயிற்சிகளை வழங்க வேண்டும்
எ.வ. வேலு பொதுப்பணித் துறை அமைச்சர்: "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதே போல உறுப்பினர்கள் ஒன்றிய அரசுடன் பேசி தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களையும் நிதிகளையும் பெற்றுத் தர வேண்டும்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சர்: கருணை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுவது போல உறுப்பினர் பேசியுள்ளார். வளர்ச்சி மிகுந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களின் வருமானத்தில் சிறு பகுதியைத் தான் ஒன்றிய அரசு திருப்பித் தருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் உற்பத்தி விழுக்காட்டில் 4.7 விழுக்காடு பங்கு மட்டுமே திரும்ப வருகிறது. உத்திரப்பிரசேத்தின் உற்பத்தி 9.7 விழுக்காடு இருக்கும் நிலையில், அங்கு 17.19 விழுக்காடு மீண்டும் அளிக்கப்பட்டு வருகிறது.
மக்களின் பணத்தில், ரூ.1 இல் 45 பைசா மட்டுமே திரும்ப வருகிறது. கருணை அடிப்படியில் எந்த நிதியும் யாரும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.
வானதி ஸ்ரீனிவாசன்: கருணை அடிப்படையில் என நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிட மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன. நீதிமன்ற தீர்ப்புகள் அந்த நிலத்தை அவர்களுக்கே அளிக்க வலியுறுத்தி உள்ளன. ஆனால் வருவாய் துறையில் பஞ்சமி நிலம் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் துறை அமைச்சர்: தமிழ்நாட்டில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 291 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை மீண்டும் உரியவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வானதி சீனிவாசன்: பஞ்சமி நிலங்களை மீட்க கர்நாடகா, மகாராஷ்டிரா போல தமிழ்நாட்டிலும் தனி சட்டம் இயற்ற வேண்டும்", எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:காவல் துறையினரை ஊக்குவிக்க சிறப்பு விருதுகள் - முதலமைச்சர் தகவல்