சென்னை: சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள படம் மார்கழி திங்கள். இப்படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பாரதிராஜா, சுசீந்திரன், லிங்குசாமி , சிவக்குமார், கார்த்தி, மனோஜ் பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
விழா மேடையில் பேசிய சீமான், "சூப்பர் சுப்பராயனை உங்களுக்கு ஒரு சண்டை பயிற்சியாளராக தான் தெரியும் ஆனால் அவர் சிறந்த இலக்கியவாதி. அதேபோல் சூப்பர் சிவக்குமார் மிகச்சிறந்த ஓவியராக வரவேண்டியவர். எங்கள் அப்பா பாரதிராஜாவும், சிவக்குமாரும் ஒரு வயதுடையவர்கள். சிவக்குமாருக்கு எந்த பழக்கமும் இல்லை.
நாம் தமிழர் கட்சியில் பாரதிராஜா: என் அப்பாவுக்கு இல்லாத பழக்கமும் இல்லை. மேலும் சூர்யா, கார்த்தி ஆகிய இருவருமே தனி மனித உழைப்பால் இன்று முன்னேறி உள்ளனர். சிவகுமார் என்பது ஒரு அடையாள அட்டை மட்டுமே. மேலும் பாரதிராஜா அவர் மகனுடன் என் கட்சியில் தொண்டனாக இணைந்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மனோஜ் பாரதிராஜாவிடம் அப்பாவின் படங்களை பார். ஆனால் அவரை போல் படம் எடுக்காதே. உன்னை அவருடன் வைத்து ஒப்பிடுவார்கள். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். பின்னர் இயக்குநர் பேரரசுவிடம், எத்தனையோ இயக்குநர்கள் படம் இயக்குகிறார்கள். நீ மறுபடியும் படங்களை இயக்க வேண்டும். படங்களை இயக்குவதை நிறுத்த வேண்டாம். புது முகங்களை வைத்து படம் இயக்க வேண்டும்” என்று கூறினார்.
பாரத் பெயரால், பசி தீர்ந்து விடுமா?: அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்பது தான் பாஜகவின் கொள்கை. இந்தியா என்பதை பாரத் என்று மாற்றுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்படி பெயர் வைப்பதால் நாட்டு மக்களின் பசி தீர்ந்துவிடுமா?, 10 ஆண்டுகளாக இல்லாமல் இப்போது பாரத் என்று பெயர் வைக்க வேண்டிய அவசியம் என்ன?, மக்களை திசை திருப்ப பாரத், சனாதனம் என்றெல்லாம் பாஜக அரசு பேசி வருகிறது.
திமுகவிற்கு சீமான் ஆதரவு: மேலும் சித்தராமையாவிற்கும், சிவக்குமாருக்கும் ஓட்டுக் கேட்டது திமுக. அவர்கள் இப்போது காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் வரும் தேர்தலில், காங்கிரசுக்கு சீட் கொடுக்க முடியாது என்று திமுக ஒரு மிரட்டலாவது விடுக்கிறதா? இல்லை. சித்தராமையாவும், சிவக்குமாரும் சொந்த மக்கள் நலனை முன்னிறுத்துகிறார்கள். திமுக தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை.
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க திமுக முன் வர வேண்டும். அப்படி வரும் போது பாஜக எதிர்த்தால் நான் திமுகவிற்கு துணை நிற்பேன். ஏழு தமிழர் விவகாரத்தில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னும், இன்னும் அகதிகள் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர்களை திமுக விடுவிக்க நடவடிக்கை எடுக்கட்டும். இதில் காங்கிரஸ் பிரச்சினை செய்தால் அப்போது திமுகவிற்கு ஆதரவாக நிற்க நான் தயார்.
வரலாற்றை திரிப்பதே வேலை: அரசியல் சட்டத்தை இயற்ற அம்பேத்கர் பங்காற்றவில்லை. பிழை திருத்தல் போன்ற சரி பார்க்கும் பணி மட்டுமே செய்தார் என்று கூறிய RBVS மணியன் ஒரு பைத்தியக்காரர். இவரை போன்றவர்கள் நிறைய பேர் உள்ளனர். வரலாற்றை திரிப்பதே இவர்கள் வேலை. நாம் பலமற்று இருப்பதால் இவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.
விஜயலட்சுமி விவகாரத்தில் காவல் துறையின் சம்மனுக்கு பதிலளிக்க ஆள் அனுப்பி விட்டேன். எல்லாவற்றிற்கும் நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை. என் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட விளக்கமும் பதிலும் போதவில்லை என்றால் பிறகு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளலாம். எதையும் சந்திப்பேன். எதிர் கொள்வேன். என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து போன திமுக தான் இவற்றையெல்லாம் செய்கிறது” என்றார்.
இதையும் படிங்க: ‘நாடாளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது திமுக தான்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!