சென்னை: திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக, அங்குள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளில், ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர்.
2ஆவது நாளாக நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தப் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் துறையினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் மயங்கி விழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் சீமான் மயங்கி விழுந்திருக்கலாம் என்றும்; அதற்கான காரணங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் சீமானுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.