டெல்லி: பண மோசடி வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.
இதனிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதக் காவலில் வைத்ததாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று(ஜூலை 4) உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. அதில், நீதிபதி நிஷா பானு, "ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். அமலாக்கத்துறை சட்ட விதிகளின்படி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதனால், செந்தில் பாலாஜியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என தீர்ப்பளித்தார்.
நீதிபதி பரத சக்கரவர்த்தி, "ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை. நீதிமன்றக் காவலில் உள்ளதை கருத்தில் கொண்டு சட்ட விரோதக் காவலில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டதாக கருத முடியாது" என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த காலத்தை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக கருத முடியாது என்றும், மருத்துவர்கள் அனுமதிக்கும் வரை செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம் என்றும் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பே இறுதியானதாக கருதப்படும்.
இந்த நிலையில், ஆட்கொணர்வு வழக்கை எதிர்த்த அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்படுவதாகவும், இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதாலும் விசாரணையை தொடர முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு கொண்டு செல்லாமல் உச்சநீதிமன்றமே தீர்ப்பளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரியது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் மூன்றாவது நீதிபதியை விரைவில் இறுதி செய்யும்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்தனர். மூன்றாவது நீதிபதியை உடனடியாக நியமித்து, வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.