சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் 14 அடுக்கு வணிக வளாக கட்டடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அனுமதியளித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் அளித்துள்ள உத்தரவில், 'கட்டடப் பணிகள் தொடங்கும்போதே கட்டடம் கட்டும் விவரத்துடன் கூடிய தகவல்களை மாணவர்கள், பெற்றோர் அறியும் வகையில் முன்னெச்சரிக்கை பதாகை வைப்பதை உறுதிப்படுத்த தவறிய சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பள்ளியில் 7ஆயிரத்து 908 மாணவர்கள் படிக்கும் நிலையில், பதாகை வைக்காததால் ஒவ்வொரு மாணவருக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்கிற அடிப்படையில், ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில், 79 லட்சத்து 8ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் பள்ளி வளாகத்தில் கட்டடம் கட்டப்படுவதால் ஏற்படும் விளைவுகளை மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டப்படும் 14 அடுக்கு மாடிக்கு பொருத்தப்படும் ஏ.சி.யினால் ஏற்படும் காற்று மாசு மற்றும் வெளியேற்றப்படும் வெப்பத்தின் அளவினையும் மாணவர்களின் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்.
அதன் பின்னர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது குறித்து பெற்றோர்கள் முடிவு எடுத்துக்கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த விசாரணை ஜூன் மாதம் 16ஆம் தேதி மீண்டும் நடைபெறும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசைப்போல எரிபொருள் விலையை மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் - தமிழிசை வேண்டுகோள்