அயனாவரம் புதிய ஆவடி சாலையில் கஞ்சா வழக்கில் ரவுடி சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை எடுத்துத் தர காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் காவல்துறையினர் சங்கரை அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கே மறைத்து வைத்திருந்த அறிவாளால் ரவுடி சங்கர் காவலர் முபாரக் என்பவரை தாக்கியதோடு மற்ற காவலர்களையும் தாக்க முற்பட்டதால், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் எழும்பூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி சிவ சக்தி வேல் கண்ணன் விசாரணை நடத்தியபோது, சங்கரின் குடும்பத்தினர் இந்த என்கவுன்ட்டர் திட்டமிட்ட படுகொலை என்று காவல் ஆய்வாளர் நடராஜ் மீது குற்றம் சாட்டினர்.
அதனை நீதிபதி சிவ சக்தி வேல் கண்ணன் எழுத்துபூர்வமாக பதிவு செய்துகொண்டார். மேலும் சங்கரின் குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் சிபிசிஐடி விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து ஒன்றாம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த மூன்றாம் தேதி காவல் உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் முபாரக், முருகன், ஜெயபிரகாஷ், வடிவேலு ஆகிய ஏழு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு ஏழாம் தேதி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.
அவர்களிடம் எழுத்துப் பூர்வமாகவும், தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டு அவை வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ரவிசங்கரின் காதலியான ராணியை கைது செய்த பெண் காவலர் ஜெயந்தி, காவலர்கள் காமேஷ்பாபு, பழனி, முத்துக்குமார், சாட்சிகளான பசுபதி , கார்த்திக் ஆகியோருக்கு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் சம்மன் அனுப்பப்பட்ட நான்கு காவலர்கள் இன்று (செப்.10) காலை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். ஆனால் சாட்சிகளான பசுபதி, கார்த்திக் ஆகியோர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை. ஆஜரான நான்கு காவலர்களிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.