சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி தர்கா மோகன் (58). இவர் மீது கொலை வழக்கு உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மாமூல், கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றங்களில் தர்கா மோகன் மற்றும் அவரது மகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு (ஆக.02) மதுபோதையில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு ரவுடி தர்கா மோகன் கையில் சிறிய கைப்பையுடன் சென்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் நின்றிருந்த பெண் தலைமை காவலர் ஜெலிபாவிடம், நான் சிந்தாதிரிப்பேட்டையில் மிகப்பெரிய ரவுடி எனவும்; தன்னை தெரியாத ஆள்கள் அங்கு யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் உங்களால் முடிந்தால் எனது கை, கால்களை உடைத்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் எனவும்; தான் வைத்திருக்கும் பையில் பாம் இருப்பதாகவும் பெண் காவலரை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அளித்த தகவலின் பேரில் இது குறித்து காவல் ஆய்வாளர் இந்துமதி புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு 3 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அம்மா நகர் பூத் அருகே வைத்து தர்கா மோகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தர்கா மோகன் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து தர்கா மோகனை சிறையில் அடைக்கும் பணிகளில் ஈடுபட்ட போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்படுவதாக தர்கா மோகன் கூறியதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உணவு டெலிவரி ஊழியர் வெட்டி கொலை, வீட்டை சூறையாடிய ஊர் மக்கள்; நெல்லையில் பரபரப்பு!!