சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிசார் அஹமது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தருவதற்காக அப்போதைய போக்குவரத்து துறை துணை செயலாளரும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவருமான மோகன்ராஜ், அவரது உதவியாளர் செல்வகுமார் ஆகியோருக்கு ரூ. 50 லட்சம் அளித்துள்ளார்.
ஆனால், மெடிக்கல் சீட் வாங்கித் தராததால் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார் நிசார் அஹமது. அதற்கு, தலா ரூ.25 லட்சம் ரூபாய்க்கான 2 காசோலைகளை நிசார் அஹமதுக்கு மோகன்ராஜ் வழங்கியுள்ளார்.
ஆனால், அந்த இரு காசோலைகளும் பவுன்ஸ் ஆனதை அடுத்து நிசார் அஹமது, இதுகுறித்து 2014-ஆம் ஆண்டு காவல்துறையினர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தன் புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் உயர் நீதிமன்றத்தை முறையிட்டார்.
இவ்வழக்கில் 2015ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் நம்பிக்கை மோசடி செய்தல், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மோகன்ராஜ், செல்வகுமார் ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று மோகன்ராஜை மத்திய குற்றப் பிரிவினர் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சென்னை தலைமை செயலகத்தில் வேலை வங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த மற்றொரு வழக்கில், நாவப்பன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கிலும் மோகன்ராஜுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இவ்வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மோகன்ராஜின் உதவியாளர் செல்வகுமார் மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் மத்திய குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.