சென்னை: பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறை மனுவை போதிய முகாந்திரம் இல்லை எனத் தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த மணிகண்டனை ஜூன் 20ஆம் தேதி தனிப்படை காவலர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து, ஜூலை 2ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன் 26ஆம் தேதி அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 5 நாள் காவல் கேட்டு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுதாக்கல் செய்தனர்.
அம்மனு சைதாப்பேட்டை பெருநகர 9ஆவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் மோகனாம்பாள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பெங்களூருவில் வைத்தே காவல்துறையினர் சார்பில் தேவையான கேள்விகள் கேட்கப்பட்டு மணிகண்டனின் பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுவிட்டன எனவும் இனி காவலில் எடுத்து விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இவ்வழக்கில் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து காவல்துறை தரப்பில், மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால் வழக்கிற்குத் தேவையான மேலும் சில ஆதாரங்களைப் பெற காவல்துறை விசாரணை தேவை என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதித்துறை நடுவர் மோகனாம்பாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க போதிய முகாந்திரம் இல்லாததால் காவல் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் இணைந்தால் வரவேற்போம் - எம்.பி. செந்தில்குமார்!