சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையின் போது ஓபிஎஸ்க்கு பக்கபலமாக நின்றவர்களில் முக்கியமாக கருதப்பட்டவர் கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோலப்பன். இவர் 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் இருந்து அவருடன் பயணம் செய்கிறார்.
நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்த போதும் அவருக்கு ஆதரவாக நாஞ்சில் கோலப்பன் பேசி வந்தார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் முழுமையாக நீக்கம் செய்யப்பட்ட போது, நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுதாக கூறி ஓபிஎஸ் அணியினர் நிர்வாகிகள் நியமனம் செய்தனர்.
அதில், நாஞ்சில் கோலப்பனுக்கு ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டதற்கு காரணம் பொன்னையன் ஆடியோ விவகாரம் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்ப கட்டத்தில் பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்றை நாஞ்சில் கோலப்பன் வெளியிட்டிருந்தார்.
பொன்னையனுடன் பேசிய ஆடியோ: அதில், பேசிய பொன்னையன், "எடப்பாடி பழனிச்சாமியால் சொந்தமாக முடிவு எடுக்க முடியாத பட்சத்தில் உள்ளார். சி.வி.சண்முகமும், கே.பி.முனுசாமி தான் முடிவு எடுக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோர் வழிநடத்துகிறார்கள்” என ஆடியோவில் நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக இருந்தது.
மேலும் அந்த ஆடியோ விவகாரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு பொன்னையன் மறுப்பு தெரிவித்து இருந்தார். அப்போது இருந்து நாஞ்சில் கோலப்பன் ஓபிஎஸ் அணியில் ஒரு முக்கியமானவராக கருதப்பட்டார். தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
மாநாட்டில் முக்கியத்துவம் இழந்த கோலப்பன்: இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நாஞ்சில் கோலப்பன் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் 24ஆம் தேதி ஓபிஎஸ் அணியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் நாஞ்சில் கோலப்பனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் தெரிகிறது.
அதன், பின்னர்தான் நாஞ்சில் கோலப்பன் தனது செயல்பாடுகளை குறைந்து கொண்டார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென நேற்று (ஆக.13) ஓபிஎஸ் அணியில் இருந்து நாஞ்சில் கோலப்பன் நீக்கப்பட்டார். இது நாஞ்சில் கோலப்பன் அதிர்ச்சி அடைய செய்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், அமைப்புச் செயலாளர் நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
ஓபிஎஸ் அணி நிர்வாகியின் விளக்கம்: மேலும் நாஞ்சில் கோலப்பன் நீக்கம் குறித்து ஓபிஎஸ் அணியின் நிர்வாகி ஒருவரிடம் விசாரிக்கும் போது, "நாஞ்சில் கோலப்பன் சமீப காலமாக ஓபிஎஸ் மீதும், கட்சி மீதும், அதிருப்தியாக இருந்ததாகவும், அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டாலும், மாநிலப் பொறுப்பு வழங்க வேண்டும் என ஓபிஎஸ்சிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் அவர் (நாஞ்சில் கோலப்பன்) தொடர்பான ஆடியோ ஒன்று வெளியானது. அதில், பொன்னையன் ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் எனவும், கட்சி நிர்வாகிகள் என்னிடம் பேசும் போது பேசுவதை பதிவு செய்யாதீர்கள் எனவும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கடந்து கட்சியின் நலனுக்காகவே பொன்னையன் ஆடியோவை வெளியிட்டேன் என கூறியதாக தெரிவித்தார்.
மேலும், பொன்னையன் ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் தான் இழந்தது அதிகம் என்றும், தொழில் ரீதியாகவும் தான் பாதிக்கப்பட்டதாகவும், நாஞ்சில் கோலப்பன் பேசியது ஓபிஎஸ்சை அதிருப்தி அடைய செய்ததாகவும் குறிப்பிட்டார். அந்த ஆடியோ வெளியாகி இரண்டு, மூன்று நாட்கள் நாஞ்சில் கோலப்பன் விளக்கம் அளிக்க ஓபிஎஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த தாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நாஞ்சில் கோலப்பன் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காத நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று நம்மோடு பேசி ஓபிஎஸ் அணியின் நிர்வாகி தெரிவித்தார். ஆனால், நாஞ்சில் கோலப்பன் பேசியதற்கான விளக்கம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் மனநிலையில்தான் ஓபிஎஸ் உள்ளதாகவும் அவர் கூறினார்.
நாஞ்சில் கோலப்பனின் விளக்கம்: இதனையடுத்து, நீக்கம் குறித்து நாஞ்சில் கோலப்பன் பதிவிட்டுள்ள சமூக வலையதள பதிவில், "அன்பு உடன்பிறப்புக்களே, எதுவுமே தெரியாமல் விமர்சனம் வைக்காதீர்கள். நான் அண்ணன் ஒபிஎஸ் அவர்களோடு ஏழு ஆண்டுகள் எந்த பதவியும் எதிர்ப்பார்க்காமல் விசுவாசத்துடன் பயணித்தவன். ஜெயலலிதா ஆட்சி இருக்கும் போது கூட பதவி கேட்டு அண்ணன் ஒபிஎஸ் அவர்களின் வாசலில் நின்றேனே தவிர, பதவிக்காக கொண்ட கொள்கையிலிருந்து மாறதவன்.
தற்போது நடந்து இருப்பது ஏன் என்ற உண்மைகள் விரைவில் வெளிவரும். உண்மை உழைப்புக்கு கிடைத்த பரிசு" என குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஓபிஎஸ்சிடம் விளக்கம் அளித்து மீண்டும் அவரது அணியில் நாஞ்சில் கோலப்பன் மீண்டும் இணைவார் என ஓபிஎஸ் தரப்பு வட்டாரங்கள் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: போக்குவரத்து மாற்றங்கள்!