புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பேரறிவாளன் விடுதலைக்குச் சில அமைப்பினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது மனவேதனையை அளிக்கிறது. முன்னாள் பிரதமரை கொன்றவர்களின் விடுதலையைக் கொண்டாடுவது அவர்களின் வக்ரபுத்தியைக் காட்டுகிறது” என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், 'புதுச்சேரியில் மின் விநியோகத்தில் நஷ்டமில்லை. ஆனால், தனியாரிடம் கொடுத்து 3 ரூபாய் யூனிட்டை 10 ரூபாய் வரை உயர்த்துவார்கள். சலுகைகள் நிறுத்தப்படும். இதனால் தொழிற்சாலைகள் வராது. மின் துறையில் பணியாற்றும் 3ஆயிரத்து 500 ஊழியர்களின் நிலை என்னவாகும்...?' என கேள்வி எழுப்பிய அவர், 'புதுச்சேரிக்கு அமித்ஷா வந்த பிறகு மின்துறை தனியார்மயம் முடிவானது.
அடுத்ததாக வேதாந்தா நிறுவனம் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோகார்பன் எடுக்க இருக்கிறார்கள். இதனால் புதுச்சேரி சுடுகாடாக மாறும். புதுச்சேரியில் சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக கேசினோவை தனியாருக்கு கொடுக்க இருக்கிறார்கள். மத்திய அரசு எது செய்தாலும் டம்மி முதலமைச்சராக ரங்கசாமி இருக்கிறார்.
அந்த முதலமைச்சர் நாற்காலிக்காக ரங்கசாமி அமைதியாக இருக்கிறார்’ என்றார். தொடர்ந்து பேரறிவாளன் - ஸ்டாலின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் கடவுளின் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுவார்கள்.
தீர்ப்பு நீதிமன்றத்தின் முடிவு; ஆனால் காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பேரறிவாளன் சந்தித்தது பற்றி கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.
இதையும் படிங்க: அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என உச்ச நீதிமன்றமே தெரிவித்து விட்டது- அமைச்சர் கேஎன்.நேரு