இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மிகவும் சிக்கலானவையாக மாறியுள்ளது. இந்நிலையில், அதற்குத் தேவையான நிதியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கீடு செய்யாதது மிகவும் வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் சம பங்கு இருக்கிறது. அதை மத்திய அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது.
கரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்பாடுத்துவதற்காக முதன் முதலில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போது, மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடி, கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி, மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க ரூ.4 ஆயிரம் கோடி என மொத்தம் 16 ஆயிரம் கோடி வழங்கும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.
அத்துடன், உணவு தானியங்கள் கொள்முதல் செய்ததற்கான மானிய நிலுவை ரூ.1321 கோடி, வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை, நிதிப்பற்றாக்குறை மானியம் உள்ளிட்ட சில தலைப்புகளில் மத்திய அரசு உதவிகளை வழங்கினாலும்கூட, தமிழ்நாடு அரசு கோரிய நிதி உதவிகள் இன்னும் வழங்கப்படவில்லை.
கடந்த 17-ஆம் தேதி பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது கூட, தமிழ்நாட்டில் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நிதி உதவிகளை வழங்கும்படி முதலமைச்சர் மீண்டும் கோரியுள்ளார். அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் வருவாய் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. ஊதியம் உள்ளிட்ட தேவைகளுக்காக கடன் வாங்க வேண்டியுள்ள நிலையில், கரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். கரோனா வைரஸ் நோய் தொடர்பான ஒவ்வொரு கட்ட ஆலோசனையின் போதும் மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துவருகிறார். எனவே, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே கோரியிருந்த ரூ.12 ஆயிரம் கோடி, உணவு தானியங்கள் கொள்முதல் செய்ததற்கான மானிய நிலுவைத் தொகை ஆயிரத்து 321 கோடி ரூபாய் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம்!