புதுடெல்லி:நிலத்தடி நீர் தரம் குறித்த 2024ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையின்படி விழுப்புரம் உட்பட இந்தியாவின் 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 440 மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் அதிக அளவு நைட்ரேட் இருப்பது தெரியவந்துள்ளது. 20 சதவிகித மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நைட்ரேட் இருப்பதும் மத்திய நிலந்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. நைட்ரஜனை அடிப்படையாக கொண்ட உரங்கள் அதிக பயன்பாடு கொண்ட பிராந்தியங்களிலும், விலங்குகளின் கழிவுகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் நைட்ரேட் மாசுபாடு என்பது முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய குறைபாடாக உள்ளது.
நிலத்தடி நீர் தரம் ஆண்டறிக்கையில் 9.04 சதவிகித மாதிரிகளில் புளோரைடு அளவு பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருப்பதும், 3.55 சதவிகிதம் அளவுக்கு ஆர்சனிக் மாசுபாடு கொண்டதாகவும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மே மாதம் நிலத்தடி நீர் தரம் குறித்து தேசிய அளவில் 15,259 கண்காணிப்பு பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தை சேர்ந்த சர்வதேச சதுரங்க சாம்பியன் குகேஷ் உள்ளிட்ட 4 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு...32பேருக்கு அர்ஜூனா விருதும் அறிவிப்பு
இதில் 25 சதவிகித கிணறுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. பருவகாலத்துக்கு முன்னர், பின்னர் என 4982 மையங்களில் நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நிலத்தடிநீர் தரம் சோதிக்கப்பட்டது. 20 சதவிகித மாதிரிகளில் ஒரு லிட்டருக்கு 45 மில்லி கிராம் என்ற அளவில் பாதுகாப்பான அளவை விட அதிமாக நைட்ரேட் இருந்தது.
விழுப்புரம் மாவட்டம்: ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான மாதிரிகளில் பாதுகாப்பு வரம்புக்கு அதிகமாக நைட்ரேட் இருந்தது. மகாராஷ்டிராவில் 35.74 சதவிகித மாதிரிகளிலும், தெலங்கானாவில் 27.48 சதவிகித மாதிரிகள், ஆந்திராவில் 23.5 சதவிகித மாதிரிகள், மத்திய பிரதேசத்தில் 22.58 சதவிகித மாதிரிகளில் அதிக அளவு நைட்ரேட் மாசுபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உரங்களில் உள்ள நைட்ரேட் பூமியின் ஆழமான பகுதி வரை ஊடுருவதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. கால்நடை பண்ணைகளில் விலங்குகளின் கழிவுகளை மோசமாக பராமரிப்பது ஆகியவற்றாலும் நிலத்தடிநீரில் நைட்ரேட் அளவு அதிகரிக்கிறது.