சென்னை: வேளச்சேரி டி.என்.எச்.பி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (20). ஆதம்பாக்கம் பெரியார் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் நரேஷ் (23). இதில் சந்துரு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நரேஷ் மேடவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.
நண்பர்களாகிய இருவரும் நேற்று புத்தாண்டு என்பதால் இரவு நேரத்தில் சந்தித்து மது அருந்தி உள்ளனர். மது அருந்திய பின்னர் இருவரும் மதுபோதையில் கிண்டி ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை தண்டவாளத்தில் நடந்தே சென்று உள்ளனர்.
அப்போது, சென்னை கடற்கரையை நோக்கி வந்த மின்சார ரயில் இருட்டில் தண்டவாளத்தில் நடந்து சென்ற இருவர் மீதும் மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவி வன்கொடுமை விவகாரத்தில் 'ஒரு சிலர்' ஈடுப்பட்டிருப்பதாக சந்தேகம் வருகிறது - திருமாவளவன்!
இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து மாம்பலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மாம்பலம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை ஒட்டி நேற்று இரவு மது அருந்திவிட்டு நண்பர்கள் இருவர் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.