நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவரது மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்ற நிலையில், அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து அவர்களுடன் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஆலோசனை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியல் கட்சி அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நிறைய கேள்விகள் இருந்ததாகவும், அதற்கான பதில்களைத் தாம் அளித்ததாகவும் தெரிவித்தார்.
அதேபோல், நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையில் 'ஒரு விஷயத்தில் தமக்கு திருப்தி இல்லை' என்றும், 'அது என்ன விஷயம் என்பதை விரைவில் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இஸ்லாம் அமைப்பினருடன் சந்திப்பு நடத்தியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, 'இஸ்லாம் மதத்தின் குருமார்கள், முக்கியப் பிரமுகர்கள் இணைந்து ஆலோசித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுங்கள்' என்று தான் விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தாங்கள் கூறிய நிலையில், கமலுடன் இணைந்து அதனை நிரப்புவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,'அதனை காலம்தான் தீர்மானிக்கும்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து கட்சிப் பணிகள் எந்த அளவிற்கு இருக்கின்றது என்ற கேள்விக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், 'கட்சிப் பணி குறித்து பேசுவதற்காக மாவட்டச் செயலர்களை சந்தித்தேன். ஆனால் எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. நிறைய விஷயங்கள் இருந்தன. ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி கிடையாது. பெருத்த ஏமாற்றம்' எனக் கூறினார். அது என்ன என்று கேள்வி கேட்டதற்கு, 'அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். சரியான நேரம் வரும்போது கூறுகின்றேன்' என்றார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்?