சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் சந்திரமுகி 2 வெளியாக உள்ளது. மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பு மற்றுமின்றி தனது அறக்கட்டளை மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். பல்வேறு மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள கே.கே நகரில் வசித்து வரும் எப்சிபா என்ற மாணவியின் கல்விச் செலவிற்காக பணவுதவி செய்து உள்ளார். இந்த மாணவி சிறு வயது முதலே லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் தான் படித்து வருகிறார்.
மேலும் அதே பகுதியில் வசிக்கும் தீபக் என்ற மாணவியின் பள்ளி படிப்பிற்கும் லாரன்ஸ் உதவி செய்து வருகிறார். இன்று மாணவி எப்சிபாவின் வீட்டிற்கு வந்த லாரன்ஸ் அவரது பாட்டி கலாவிடம் காசோலை கொடுத்து மாணவியை வாழ்த்தினார். மாணவி எப்சிபாவிற்கு பெற்றோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், "நான் ஆரம்ப காலத்தில் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்தேன். தற்போது வருடத்திற்கு மூன்று படம் நடிக்கிறேன். ருத்ரன் வந்தது, தற்போது சந்திரமுகி 2 வருகிறது, அடுத்து ஜிகர்தண்டா 2 இருக்கிறது. இதனால் தான் யாரும் எனது அறக்கட்டளைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறினேன்.
உதவி செய்பவர்கள் நேரடியாக அவர்களுக்கு உதவி செய்யட்டும். நான் ஏற்கனவே செல்லி இருந்தேன், என்னிடம் தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்தால் அது உதவி நாம் தேடி போய் உதவி செய்தால் அது தர்மம்" எனத் தெரிவித்தார். இதனையடுத்து பயனாளி கலா பேசுகையில், "எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார். எனது பேத்தியின் படிப்புக்கு அவர்தான் உதவி செய்கிறார். தற்போது கூட 20 ஆயிரம் ரூபாய்கான காசோலையை கொடுத்து எனது பேத்தியின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த செல்லி இருக்கிறார். மழை வெள்ளம் காலத்திலும் அவர் தான் உதவினார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மலையாள நடிகை அபர்ணா நாயர் மர்மமான முறையில் உயிரிழப்பு?... போலீசார் விசாரணை