சென்னை: கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி குறித்து நக்கீரன் இதழில் செய்தி வெளியானது. அந்த செய்தியில் ஆளுநர் குறித்து அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது ஆளுநரின் செயலர் புகார் அளித்தார்.
நக்கீரன் கோபால் கைது:
இந்த புகாரில் கோபால் உள்ளிட்டோர் மீது சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பத்திரிகை, ஊடகத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டகளத்தில் குதித்த நிலையில் மாலையில் விடுவிக்கப்பட்டார்.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரை காவல் துறையினர் தடுத்தனர். இதனால், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட ஐந்து பேர் மீது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, போக்குவரத்தை முடக்கியது ஆகிய பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வைகோ மீதான வழக்கு ரத்து:
இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் இன்று (ஜூலை 07) பிறப்பித்த தீர்ப்பில் வைகோ உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்