சென்னை பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக்கல்லூரியில், மருத்துவமனை தினத்தை முன்னிட்டு பல்மருத்துவக் கண்காட்சி மற்றும் ரத்த தான முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பள்ளி மாணவர்களுக்கு பற்களைப் பராமரிப்பதற்கான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பல் மருத்துவக்கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல் மருத்துவக்கல்லூரியில் தலா 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு 3ஆவது பல் மருத்துவக்கல்லூரி புதுக்கோட்டையில் அமையவுள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் 50 மாணவர்கள் சேரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான மாணவர் சேர்க்கைக்கான அனுமதி பெற, டெல்லியில் உள்ள பல் மருத்துவ கவுன்சிலிற்கு அடுத்த மாதம் சுகாதாரத்துறை செயலாளருடன் டெல்லி செல்லவுள்ளோம். மேலும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்கவும், தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தவுள்ளோம்.
சென்னையில் மாநகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடமாடும் பல் பரிசோதனை வாகனம் மூலம் பள்ளிகளுக்குச்சென்று பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இதேபோன்று நடமாடும் பல் பரிசோதனை வாகனத்தில் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழவதும் 4,308 மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பல் மருத்துவர்கள் பணியிடங்களும் அடங்கும். செப்டம்பருக்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாடு பல் மருத்துவக்கல்லூரிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது தீவிரப்படுத்தப்படும். இந்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கண் பரிசோதனைக்குப் பிறகும் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. செவிலியர் படிப்பினை தனியார் நர்சிங் கல்லூரிகளில் அதிகளவில் கற்பித்து வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் செவிலியர் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
வரும் கல்வியாண்டில் திருச்சியில் புதியதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்படும். சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் எதிரில் 6 ஏக்கர் இடம் உள்ளது. அங்கு செவிலியர் படிப்பு அல்லது மருத்துவம் சார்ந்த படிப்புகளை தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Exclusive Video: செங்கல்பட்டு அரசு மருத்துவரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - முதலமைச்சர் தலையிட வேண்டும்!