சென்னை: பெருநகர சென்னை காவல்துறையினர் ட்விட்டர் சமூக வலைதள பக்கம் @chennaipolice_ என்ற ஐடி மூலம் இயங்கி வருகிறது. ட்விட்டரில் சென்னை பெருநகர காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 135,924 நபர்கள் பின் தொடர்கின்றனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் @ChennaiTraffic என்ற ட்விட்டர் பக்கத்தை 73,994 நபர்கள் பின் தொடர்கின்றனர்.
சென்னை போக்குவரத்து காவல்துறை ட்விட்டர் செயலியின் மூலம் சாலைப் பயனர்களுக்கு போக்குவரத்து ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் போக்குவரத்து மாற்றங்களைப் பற்றிய எச்சரிக்கை செய்திகளைத் தெரியப்படுத்துவதையும் இந்த ட்விட்டர் பக்கத்தின் முக்கியமான நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது.
சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சமூக ஊடக ட்விட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகன ஓட்டுபவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் பின்புறம் இருக்கையில் பயணம் செய்பவர்கள், நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள்.
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை இயக்குவது, தவறான வாகன எண் பலகை பொருத்துதல், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், சாலையில் போக்குவரத்து நிறுத்தற்கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.
மேலும் பேருந்துகளில் தொங்கிக் கொண்டும் பேருந்துகளின் மீது ஏறிக் கொண்டு சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நபர்கள் குறித்தும், பொதுமக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சென்னை காவல்த்துறை, போக்குவரத்து காவல்த்துறையை அதில் டேக் செய்கின்றனர்.
இவ்வாறு பெறப்பட்ட ட்விட்டர் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நடவடிக்கையின் விவரங்கள் ட்வீட்டர் பக்கங்களில் பகிரப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களில் இது போன்ற 4,032 புகார்கள் ட்விட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 3867 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு சமூக வலைதளங்கள் மூலம் அன்றாடம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்கள் அம்பலப்படுத்துவதன் மூலம் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கு போலீசாருக்கு ஏதுவாக உள்ளது. மேலும் இதுபோல பொதுமக்கள் அளித்த புகார்களால் காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் வாகனங்கள் மீது கூட வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களின் நடத்தையை CCTV கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இக்கேமராக்களின் சேவையானது போக்குவரத்து காவல் துறையினரின் "மூன்றாவது கண்" ஆக இருந்து வருகின்றன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சமூக ஊடகத்தை "நான்காவது கண்" எனப் பயன்படுத்தி தொடர்ந்து விழிப்புடனும் சமூகப் பொறுப்புடனும் இருக்கும் குடிமக்களை தீவிரமாக கண்காணிக்க இந்த சமூக வலைதளம் பயன்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.